×

டாட் டூ போட்டுக் கொள்ளலாமா?

நன்றி குங்குமம் டாக்டர்

அந்தக்காலத்தில், தங்கள் பெயர் அல்லது தங்களுக்கு பிடித்தமானவர்களின் பெயரை உடலில் பச்சைக்குத்திக் கொள்ளும் பழக்கம் இருந்து வந்தது. அதுவே, தற்போது டாட்டூ என்கிற பெயரில் நவீனமயமாகிவிட்டது. இதில் ஆண், பெண் பேதமின்றி அனைவரும் டாட்டூ குத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதிலும் இளைஞர்கள் பலரும், தங்கள் பெயர் அல்லது தங்கள் பெயரின் முதல் எழுத்து, சிறு உருவங்கள், பிடித்த பிரபலங்களின் பெயர்கள் போன்றவற்றை டாட்டூவாக போட்டுக்கொள்கிறார்கள்.

ஆனால், டாட்டூ போட்டுக்கொள்ளும்போது சிலருக்கு அலர்ஜி, அரிப்பு, சரும பிரச்னை, காசநோய் தொடங்கி HIV பரவுதல் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலும், டிசைன் செய்யப்பட்ட இடத்தில் உள்ள மையை அழிக்க நினைக்கும்போது அதிகளவில் லேசர் கதிர்வீச்சைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனை தொடர்ந்து உடலின் ஓரிடத்தில் செலுத்தும்போது, அந்த இடம் வெண்மையாக மாறிவிடுகிறது. அப்படி மாறியிருப்பதைப் பற்றி மற்றவர்கள் கேலி செய்கிறார்கள் என்பது ஒருபுறம் என்றாலும், அவருக்கே அது மனரீதியாகக் குழப்பங்களையும் பிரச்னைகளையும் உருவாக்கலாம். எனவே டாட்டூ போட்டுக் கொள்வதைப் பற்றி நன்கு ஆலோசித்துவிட்டு பிறகு போட்டுக் கொள்ளுங்கள்.

டாட்டூ போட்டுக் கொள்ளும் முன் கவனிக்க வேண்டியவை:டாட்டூ போடும் ஊசியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதாவது, டாட்டூ போட பயன்படுத்தும் ஊசியின் சுகாதாரம் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். ஏனென்றால், நமக்கு பயன்படுத்த போகும் ஊசி புதிதா அல்லது வேறு யாருக்கேனும் பயன்படுத்தியதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்தினால் அதன்மூலம் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதுபோன்று, டாட்டூ வரைபவர் கையுறை அணிந்திருக்க வேண்டியது அவசியம்.

முதன்முறையாக, டிசைன் போட்டுக்கொள்பவர்கள் சிறிய அளவிலான டாட்டூக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். டாட்டூவால் உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்று உறுதியானதும் வேண்டுமானால், பெரிய அளவிலான டாட்டூக்களைப் போட்டுக்கொள்ளலாம். அதுபோன்று, போட்ட டாட்டூ டிசைன்களை அழிக்கும்போது ஏற்படும் விளைவுகள் அதிகம். அதனால், பல வண்ணங்களில் டாட்டூ போட்டுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சிவப்பு கலர் டாட்டூகளை அழிக்கும்போதும் கடும் பக்கவிளைவுகள் ஏற்படப் பெரிதும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஆசைக்காக போடுவதென்றால் தற்காலிக டாட்டூ போட்டுக்கொள்வதே நல்லது.

டாட்டூ குத்திக்கொள்ள செல்லுவதற்கு முந்தைய இரவில் காபி அல்லது ஆல்கஹால் அருந்தாமல் இருப்பது நல்லது. அவை ரத்தத்தை நீர்த்துப்போக செய்வதால், பச்சை குத்தும்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் உண்டு.டாட்டூவில் இரண்டு வகை உண்டு. ஒன்று பர்மனென்ட் டாட்டூ. மற்றொன்று டெம்ரவரி டாட்டூ. பெர்மனென்ட் டாட்டூஸ் வாழ்நாள் முழுவதும் உடலில் இருக்கும். டெம்ரவரி டாட்டூஸ் ஒரு வாரத்தில் அழிந்துவிடும். மேலும்,டெம்ரவரி டாட்டூஸ் போடுவதால் வலிகள் ஏற்படுவதில்லை. ஆனால் பர்மனென்டாக போடும்போது கட்டாயம் வலி இருக்கும்.

பர்மனென்ட் டாட்டூஸ் போட்ட இடத்தில் 20 நாட்களுக்கு சூரியஒளி படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டாட்டூஸ் மீது தண்ணீர் படலாம். ஆனால் சோப்பு போன்ற கெமிக்கல்களும் படக்கூடாது. தேங்காய் எண்ணெய் போடுவது மற்றும் நேரடியாக ஷவர் பாத் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.உரிமம் பெற்ற இடங்களில் மட்டுமே டாட்டூ போட்டுக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால், தரமான நிபுணர்களிடம் போட்டால் அவர்கள் நல்ல இங்க் பயன்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் போட்டுக் கொள்பவரின் சருமத்திற்கு எந்தவித இங்க் பொருந்தும் என்பதை அறிந்திருப்பார்கள். அதுவே, தரமற்ற டாட்டூ போடும் இடங்களுக்கு சென்று போட்டால், அவர்கள், சரும வகைகளை அறிந்திருக்க மாட்டார்கள், மேலும், சுத்தமற்ற ஊசிகளை பயன்படுத்தவும் வாய்ப்பு உண்டு. இதனால், நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

டாட்டூ போட்ட பின்னர், கைகளுக்கும், உடலுக்கும் அதிக உழைப்பு இருக்கக் கூடாது. ஜிம்மிற்கு போவது, நீச்சல் அடிப்பது போன்றவை தவிர்க்க வேண்டும்.அதன் மீது அழுத்தம் கொடுக்காத உடைகளை அணிவது நல்லது. அதுபோன்று, டாட்டூ போட்ட பின், ஆன்டிபயாடிக் மருந்தை தடவி விட்டு, அதைச் சுற்றி பேண்டேஜ் அணிய வேண்டும். பின்னர் புண் ஆறும்வரை பேபி ஆயிலை தடவி வரவேண்டும். டாட்டூக்களைப் போட்டுக்கொள்ளும்முன் இது அவசியம்தானா என்று நன்கு யோசித்து முடிவெடுங்கள். போட்டுக்கொண்ட பிறகு யோசிப்பதால் பலனில்லை.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post டாட் டூ போட்டுக் கொள்ளலாமா? appeared first on Dinakaran.

Tags : Saffron ,Dinakaran ,
× RELATED ங போல் வளை